அவன்
ஒத்தையடிப் பாதையிலே
ஊர்வலமாப் போறவளே
வெட்டரிவா வச்சவளே
விந்திவிந்திப் போறதெங்கே?
கொண்டையில் பூமணக்கக்
கொசுவத்தில் நான்மணக்கத்
தண்டையில ஊர்மணக்கத்
தங்கமயில் போறதெங்கே?
தூக்குச் சட்டியில்ல
தொணைக்குவர யாருமில்ல
காலுக்குச் செருப்புமில்ல
காட்டுவழி போறதெங்கே?
அவள்
தூண்டிமுள்ளுக் கண்னழகா
தூரத்தில் பேரழகா
போறவளக் கேலிசெய்யும்
புளியவிதைப் பல்லழகா
முருக மலைமேல
முள்விறகு நானெடுக்க
பொழப்பு நடக்கணுமே
புறப்பட்டேன் கால்கடுக்க
ஒம்பொழப்பு தரையோட
எம்பொழப்பு மலையோட
நெத்திவெயில் பொழுதாச்சு
நேரமில்லை விளையாட
எட்டுமேல எட்டுவச்சு
எட்டுமைல் நான்நடந்தா
உச்சிப் பொழுதுவரும்
உள்நாக்கில் தாகம்வரும்
செத்தஎலி மிதந்தாலும்
செல்லாத்தா சுனைத்தண்ணி
உள்நாக்க நனைக்கையிலே
உசுருக்கு உசுருவரும்
கோடைவெயில் சுட்டதிலே
கொப்புளந்தான் மெத்தவரும்
கொப்புளத்தக் கற்பழிச்சுக்
குச்சிமுள்ளு குத்தவரும்
இண்டம் புதர் இழுக்கும்
எலந்தமரம் கைகிழிக்கும்
பொத்தக் கள்ளிமுள்ளு
பொடவையில நூலெடுக்கும்
பொசுக்கென்று மழைவருமோ?
போகையிலே புயல் வருமோ?
காஞ்சமரம் வெட்டையிலே
ரேஞ்சர் வருவானோ?
எங்கிருந்தோ பயம்வந்து
எச்சில் உலந்திவிடும்
மாத விலக்கானாலும்
பாதியில் நின்னுவிடும்
வேறகு வெட்டும் அரிவாளோ
வேறகவிட்டு வெரலுவெட்டும்
கத்தாழை நார்தானே
கடைசியிலே கயிறுகட்டும்
கட்டிவச்ச வேறகெடுத்து
நட்டுவச்சு நான்தூக்க
நலுங்காமத் தூக்கிவிட
நானெங்கே ஆள்பார்க்க?
இடுப்புப் புடிக்க
எங்கழுத்துக் கடுகடுக்க
மந்தைவந்து நான்சேர
மாலை மசங்கிவிடும்
மந்தையில வெறகவச்சா
மங்கையைத்தான் பாப்பாக
பச்சை விறகாச்சேன்னு
பாதிவெலை கேப்பாக
கேட்ட வெலைக்குவித்துக்
கேழ்வரகு வாங்கிக்கிட்டு
முந்தாநாள் கத்தரிக்கா
முந்தியில ஏந்திக்கிட்டுக்
குடிசைக்கு நான்போனாக்
குடிதண்ணீர் இருக்காது
என்வீட்டு அடுப்பெரிக்க
எனக்கு விறகிருக்காது
No comments:
Post a Comment