Monday, January 21, 2019

நீயும் நானும் எதிரிலுமில்லை... எதிரியுமில்லை...

கார்த்திகை மழைக்கும்
மார்கழி பனிக்கும்
சிறந்து பிறந்தவளே....
பனி ஈரமாய் இருப்பது வரம்
உன்னோடு பாவ விமோசனமாய்
நானிருப்பது சாபம்......?!

முன்னிரவில் பயிர் செய்து
பின்னிரவில் அறுவடை செய்யும்
சிறந்த விவசாயி நீ.....
நீ மூலதனம் போட்டது
என் முன்னெற்றியில் இருந்துதான்...

இருண்டு கிடக்கும் இரவினில்
இடைவெளியில்லா பெருமூச்சு நான்
எனது பருவ பார்வைகள்
உன் சிறு வெளிச்சம் தேடியபடி.....

மானிடப் பிறவியின்
மகத்தான தத்துவமே
நீ என்னை வென்று கொன்று விடு
நான் போராடி தோற்றுக் கொள்கிறேன்....

இரவின் போரில்
யார் வென்றிட கூடும்.....
இருவரும் தான்....
ஏகாந்த சிக்கலில் சிக்கிய படி....
இளகி உயிர் கசிந்த படி....

அடப் போ
அடுத்த போர் வர ஆண்டு ஆகும்...
அதுவரை
நீயும் நானும்
எதிரிலுமில்லை...
எதிரியுமில்லை...


Tuesday, January 8, 2019

தூர்...



வேப்பம்பூ மிதக்கும்
எங்கள் வீட்டுக்கிணற்றில்
தூர்வாரும் உற்சவம்
வருடத்துக்கு ஒருமுறை
விஷேசமாக நடக்கும்.

ஆழ் நீருக்குள்
அப்பா முங்க முங்க
அதிசயங்கள் மேலே வரும்...
கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,
துருப்பிடித்தக் கட்டையோடு
உள் விழுந்த ராட்டினம்,
வேலைக்காரி திருடியதாய்
சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்...
எடுப்போம் நிறையவே!                                                                                   

சேறுடா சேறுடாவென
அம்மா அதட்டுவாள்
என்றாலும்
சந்தோஷம் கலைக்க
யாருக்கு மனம் வரும்?

படை வென்ற வீரனாய்
தலைநீர் சொட்டச் சொட்ட
அப்பா மேலே வருவார்.

இன்று வரை அம்மா
கதவுக்குப் பின்னிருந்துதான்
அப்பாவோடு பேசுகிறாள்.

கடைசி வரை அப்பாவும்
மறந்தே போனார்
மனசுக்குள் தூர் எடுக்க..!”

                 -    நா. முத்துக்குமார்.