Saturday, September 29, 2018

வலிக்கிறது இதயம்...!


ஆயிரம் உறவுகள் 
அன்பு காட்டினாலும் 
எதிர் பார்த்த உறவிடமிருந்து
அன்பு கிடைக்கவில்லை 
எனும் போதுதான்
வலிக்கிறது இதயம்...


என் இனியவளே...!


உன் மனமெனும் நதியில் பாசத்தால் மூழ்கி
 எழ மனமில்லாமல் உன் இதயமதில் தங்கிவிடுவேன் 
நிரந்தரமாய் என் இனியவளே...



குறும்செய்தி...!

குழந்தை
தன் 
பசிக்காக 
தன்
அன்னையை 
தேடுவது போல்,
நொடிக்கொருமுறை
தேடுகிறேன் 
அவனது 
குறும்செய்தியை...


Tuesday, September 25, 2018

உரையாடல்.....


அவனுடனான 
உரையாடல்
மட்டும்
முடிவின்றி
நீண்டுக்
கொண்டே 
தொடர் கதையாய்
செல்கிறது..,
பேச 
வார்த்தைகள்
இருந்தும்
மூன்றெழுத்தை 
மந்திரமாய்
வினவுகிறோம்
அன்பில் மதிமயங்கி




Sunday, September 23, 2018

அவள் நினைவுகள் நிறைத என் உலகம்...!


பருகும் தேநீரில் கொஞ்சம்..

பிடித்த பாடல்களில் கொஞ்சம்..

தீண்டிச்செல்லும் பூங்காற்றில் கொஞ்சம்..

தொட்டுச்செல்லும் வண்ணத்துப்பூச்சியில் கொஞ்சம்..

என,
அவள் நினைவுகள் நிறைத்தே இருக்கிறது, 
என் உலகம்..



நீ மட்டும் ஏன் திருட மறுக்கிறாய்

புத்தகத் திருடனாய் நானும் 
எனைத் திருடிய புத்தகமாய் நீயும்.. 

இணையம் 
அலைபேசி 
கேளிக்கைகள் 
இவைகளெல்லாம் என் நேரத்தை 
என்னை ஏமாற்றி திருடுகிறது .. 

நீ மட்டும் ஏன் 
திருட மறுக்கிறாய் .. 

நிச்சயம் உன் திருட்டினால் 
நான் இழக்கப்போவதில்லை... 
இளைப்பாறத்தான் போகிறேன் ...



எனக்காக...!

இருளில் நிலவாக 
உன் முகம்...
காத்திருந்த என் குறுஞ்செய்தி உன்னை சேர்ந்ததும்..
மே(சோ)கம் விலகி முழுமதி தரிசனம்...



என்னவளே...!


உன் முகம் 
காணாமல் 
உன்னழகில் 
விழுந்தேன் 
உன் கால் 
பாதங்கள் 
படும் மண்ணில் 
என் நிழல் 
தொடர 
உன் கரம் 
பிடிக்கும் 
வரம் தருவாயா...




Wednesday, September 19, 2018

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்

உன் உள்ளம் அன்பால் 
நிறையட்டும் !
உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும் !
உன் கனவுகள் வானத்தை தொடட்டும் !
உன் வெற்றிகள் உன்னை  
முத்தமிடட்டும் !
என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!


ஒளியில் காதல்....

நிலவின் 
ஒளியில் காதல்
நினைவலைகளில் 
நீந்தி
கொண்டிருக்கிறேன் 
நிலவைத் 
தொட 
அல்ல!!!
அவளின் 
நிழலை 
தொட!!!!



Tuesday, September 18, 2018

மழை...!


மழை வரும் போதெல்லாம்
நனைகிறேன்
ஒரு நாள் மழையே இல்லாமல்
போகுமோ என்ற பயத்தில்




கனத்த இதயத்தில்...!


கருவுற்ற ஆண் ஆனேன்
காதலியே நீ என்
கை கோர்த்த பின்பு...
என் கனத்த இதயத்தில்
துடிக்கிறது
கருவுற்ற காதல்.....




Saturday, September 15, 2018

Vairamuthu Kavithaigal | Viragu | வைரமுத்து கவிதைகள் | விறகு


அவன் 
ஒத்தையடிப் பாதையிலே
ஊர்வலமாப் போறவளே
வெட்டரிவா வச்சவளே
விந்திவிந்திப் போறதெங்கே?

கொண்டையில் பூமணக்கக்
கொசுவத்தில் நான்மணக்கத்
தண்டையில ஊர்மணக்கத்
தங்கமயில் போறதெங்கே?

தூக்குச் சட்டியில்ல
தொணைக்குவர யாருமில்ல
காலுக்குச் செருப்புமில்ல
காட்டுவழி போறதெங்கே?

அவள் 
தூண்டிமுள்ளுக் கண்னழகா
தூரத்தில் பேரழகா
போறவளக் கேலிசெய்யும்
புளியவிதைப் பல்லழகா

முருக மலைமேல
முள்விறகு நானெடுக்க
பொழப்பு நடக்கணுமே
புறப்பட்டேன் கால்கடுக்க

ஒம்பொழப்பு தரையோட
எம்பொழப்பு மலையோட
நெத்திவெயில் பொழுதாச்சு
நேரமில்லை விளையாட

எட்டுமேல எட்டுவச்சு
எட்டுமைல் நான்நடந்தா
உச்சிப் பொழுதுவரும்
உள்நாக்கில் தாகம்வரும்

செத்தஎலி மிதந்தாலும்
செல்லாத்தா சுனைத்தண்ணி
உள்நாக்க நனைக்கையிலே
உசுருக்கு உசுருவரும்

கோடைவெயில் சுட்டதிலே
கொப்புளந்தான் மெத்தவரும்
கொப்புளத்தக் கற்பழிச்சுக்
குச்சிமுள்ளு குத்தவரும்

இண்டம் புதர் இழுக்கும்
எலந்தமரம் கைகிழிக்கும்
பொத்தக் கள்ளிமுள்ளு
பொடவையில நூலெடுக்கும்

பொசுக்கென்று மழைவருமோ?
போகையிலே புயல் வருமோ?
காஞ்சமரம் வெட்டையிலே
ரேஞ்சர் வருவானோ?

எங்கிருந்தோ பயம்வந்து
எச்சில் உலந்திவிடும்
மாத விலக்கானாலும்
பாதியில் நின்னுவிடும்

வேறகு வெட்டும் அரிவாளோ
வேறகவிட்டு வெரலுவெட்டும்
கத்தாழை நார்தானே
கடைசியிலே கயிறுகட்டும்

கட்டிவச்ச வேறகெடுத்து
நட்டுவச்சு நான்தூக்க
நலுங்காமத் தூக்கிவிட
நானெங்கே ஆள்பார்க்க?

இடுப்புப் புடிக்க
எங்கழுத்துக் கடுகடுக்க
மந்தைவந்து நான்சேர
மாலை மசங்கிவிடும்

மந்தையில வெறகவச்சா
மங்கையைத்தான் பாப்பாக
பச்சை விறகாச்சேன்னு
பாதிவெலை கேப்பாக

கேட்ட வெலைக்குவித்துக்
கேழ்வரகு வாங்கிக்கிட்டு
முந்தாநாள் கத்தரிக்கா
முந்தியில ஏந்திக்கிட்டுக்

குடிசைக்கு நான்போனாக்
குடிதண்ணீர் இருக்காது
என்வீட்டு அடுப்பெரிக்க
எனக்கு விறகிருக்காது




Tuesday, September 11, 2018

தோழிமார் கதை| Thozhimaar kadhai | Vairamuthu Kavidhaigal


ஆத்தோரம் பூத்த மரம்
ஆனை அடங்கும் மரம்
கிளையெல்லாம் கூடுகட்டி
கிளி அடையும் புங்க மரம் .
புங்க மரத்தடியில்
பூவிழுந்த மணல்வெளியில்
பேன் பார்த்த சிறுவயசு
பெண்ணே நெனவிருக்கா ?

சிறுக்கிமக பாவாட
சீக்கிரமா அவுறுதுன்னு
இறுக்கி முடிபோட்டு
எங்க ஆத்தா கட்டிவிட !
பட்டு சிறுகயிறு
பட்டயிடம் புண்ணாக
இடுப்புத் தடத்தில் நீ
எண்ண வச்ச நெனவிருக்கா ?

மருதாணி வச்ச விரல்
மடங்காம நானிருக்க !
நாசமாப்போன
நடுமுதுகு தானரிக்க !
சுருக்கா நீவந்து
சொறிஞ்ச கத நெனவிருக்கா ?

கருவாட்டுப் பானையில
சிறுவாட்டு காசெடுத்து
கோனார் கடதேடி
குச்சி ஐசு ஒண்ணுவாங்கி
நாதிங்க நீகொடுக்க
நீதிங்க நாகொடுக்க !
கலங்கிய ஐஸ் குச்சி
கலர்க்கலரா கண்ணீர்விட !
பல்லால் கடிச்சு பங்குபோட்ட வேளையில
மீதிமண்ணில் ரெண்டுதுண்டா
விழுந்துடுச்சே நெனவிருக்கா ?

வெள்ளாறு சலசலக்க
வெயில்போல நிலவடிக்க !
வெள்ளித்துருவல் போல்
வெள்ளைமணல் பளபளக்க !
கண்ணாமூச்சி ஆடயில
கால்கொலுச நீதொலைக்க !
சூடுவைப்பா கெழவின்னு
சொல்லி சொல்லி நீ அழுக !
எங்காலுக் கொலுச
எடுத்துனக்கு மாட்டிவிட்டு
என்வீட்டில் நொக்குபெத்தேன்
ஏண்டீ நெனவிருக்கா ?

பல்லாங்குழி ஆடயில
பருவம் திறந்துவிட !
ஈரப்பசை கண்டு
என்னமோ ஏதோனு
சாகத்தான் போறேன்னு
சத்தமிட்டு நாங்கத்த
விறுவிறுன்னு கொண்டாந்து
வீடுசேர்த்த நெனவிருக்கா ?

ஒண்ணா வளந்தோம்
ஒருதட்டில் சோறுதின்னோம் !
பிரியாதிருக்க ஒரு
பெரியவழி யோசிச்சோம் !
ஒரு புருஷன் கட்டி
ஒருவீட்டில் குடியிருந்து
சக்களத்தியா வாழ
சம்மதிச்சோம் நெனவிருக்கா ?

ஆடு கனவு கண்டா
அருவா அறியாது .
புழுவெல்லாம் கனவுகண்டா
கொளுவுக்கு புரியாது .
எப்படியோ பிரிவானோம்
இடிவிழுந்த ஓடானோம் !
இருவது வயசோட
இருவேறு திசையோனோம் .

தண்ணியில்லா காட்டுக்கு
தாலிகட்டி நீபோக ,
வறட்டூரு தாண்டி
வாக்கப்பட்டு நா போக ,
ஒம்புள்ள ஒம்புருஷன்
ஒம்பொழப்பு உன்னோட !
எம்புள்ள எம்புருஷன்
எம்பொழப்பு என்னோட .

நாளும் கடந்துடுச்சு
நரைகூட விழுந்துடுச்சு !
வயித்தில் வளந்த கோடி
வயசுக்கு வந்திடுச்சு !
ஆத்தோரம் பூத்தமரம்
ஆன கட்டும் புங்கமரம்
போன வருஷத்து
புயல்க்காத்தில் சாஞ்சுடுச்சு .................................




வைரமுத்துவின் ஆயிரம் தான் கவி சொன்னேன்

வைரமுத்துவின் ஆயிரம் தான் கவி சொன்னேன்
ஆயிரம் தான் கவி சொன்னேன்
அழகழகா பொய் சொன்னேன்
பெத்தவளே உன் பெருமை ஒத்த வரி சொல்லலையே
காத்தெல்லாம் மகன் பாட்டு, காகிதத்தில் அவன் எழுத்து
ஊரெல்லாம் மகன் பேச்சு, உன் கீர்த்தி எழுதலையே௦.

எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ ?
எழுதவோ படிக்கவோ இயலாத தாய் பற்றி
எழுதி என்ன லாபமன்னு எழுதாம போனேனோ??

பொன்னையா தேவன் பெற்ற, பொன்னே குலமகளே,
என்னை புறந்தள்ள வயிற்று வலி பொறுத்தவளே,
வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல
வைரமுத்து பிறப்பான்னு வயிற்றில் நீ சுமந்ததில்ல
வயிற்றில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிடுச்சு !!!!

கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!
கண்ணு காது மூக்கோட, கருப்பா ஒரு பிண்டம்,
இடப்பக்கம் கிடக்கையில என்னென்ன நினைச்சிருப்பே!
கத்தி எடுப்பவனோ? களவாட பிறந்தவனோ ?
தரணி ஆள வந்த, தாசில்தார் இவன் தானோ ?
இந்த விவரங்க, எதோன்னும் தெரியாம,
நெஞ்சூட்டி வளத்த உன்ன, நெனச்சா அழுகை வரும் .

கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,
கத கதன்னு கலி கிண்டி, கலிக்குள்ள குழி வெட்டி,
கருப்பட்டி நல்லெண்ணெய் கலந்து தருவாயே,
தொண்டையில, அது இறங்கும் சுகமான இளம் சூடு,
மண்டையில இன்னும் மசமசன்னு நிக்குதம்மா………

கொத்தமல்லி வறுத்து வச்சு, குறுமிளகாய் ரெண்டு வச்சு,
சீரகமும் சிறுமிளகும், சேத்து வச்சு நீர் தெளிச்சு.
கும்மி அரச்சி, நீ கொழ கொழன்னு வழிக்கயில,
அம்மி மணக்கும், அடுத்த தெரு மணமணக்கும்,

தித்திக்க சமச்சாலும், திட்டிகிட்டே சமச்சாலும்,
கத்திரிக்காயில் நெய் வழியும், கருவாட்டில் தேன் ஒழுகும்,
கோழி குழம்பு மேல, குட்டி குட்டியாய் மிதக்கும் தேங்காய் சில்லுக்கு,
தேகமெல்லாம் எச்சில் ஊரும்…..

வறுமையில நாமப்பட்ட வலி தாங்க மாட்டான் அவன்,

பேனா எடுத்தேன், பிரபஞ்சம், பிச்சு ஏறிஞ்சேன்,

பாசமுள்ள வேலையில, காசு பணம் கூடலையே,
காசு வந்த வேலையில பாசம் வந்து சேரலையே…..

கல்யாணம் நா செஞ்சு, கதியற்று நிக்கையில,
பெத்த அப்பன், சென்னை வந்து சொத்தெழுதி போன பின்னே,
அஞ்சாறு வருஷம், உன் ஆசை முகம் பாக்காம,
பிள்ளை மனம் பித்தாச்சே, பெத்த மனம் கல்லாச்சே…..

படிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி வச்ச மகன்
கை விட மாட்டான்னு கடைசியில நம்பலையே
பாசம் கண்ணீரு பழைய கதை எல்லாமே
வெறிச்சோடி போன வேதாந்தம் ஆயிடுச்சே,

வைகையில ஊர் முழுக, வல்லூறும் சேர்ந்தெழுக,
கை பிடியாய் சேர்த்து வந்து, கரை சேர்த்து விட்டவளே….
எனக்கு ஒண்ணு ஆனதுனா, உனக்கு வேற பிள்ளை உண்டு,
உனக்கு ஒண்ணு ஆனதுனா எனக்கு வேற தாயும் உண்டா ?????










சுட்டும் விழிச் சுடர் தான் - Suttum vizhichudar than

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று





தேடிச் சோறுநிதந் தின்று - Thedi choru nitham


தேடிச் சோறுநிதந் தின்று - பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி - மனம்
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து - நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி - கொடுங்
கூற்றுக் கிரையெனப்பின் மாயும் - பல
வேடிக்கை மனிதரைப் போலே - நான்
வீழ்வே னென்று நினைத் தாயோ?நின்னைச் சிலவரங்கள் கேட்பேன் - அவை
நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும்
மூளா தழிந்திடுதல் வேண்டும் - இனி
என்னைப் புதியவுயி ராக்கி - எனக்
கேதுங் கவலையறச் செய்து - மதி
தன்னை மிகத்தெளிவு செய்து - என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்...



Saturday, September 8, 2018

காதலன் நெஞ்சம்

உன் விழித்திரள் மொத்தமும்
சேர்ந்தென்னை வளைக்க
வீழ்ந்தது போதையடி..
உன் மொழித்திரள் உதிர்ந்தது
வெட்கமாய் குழைந்தது
விண்ணுக்கே பாதையடி.. 
அழகொத்தி பறவையாய்
இருக்கிறாய் உனை
அள்ளிட துடிக்குதடி… 
ஆழமாய் விளைவித்த காதலில்
அன்பை அறுக்கின்றேன்… 
ஆழ்கடல் என்பது காதலன் நெஞ்சம்
அறிந்திடு காதலடி...



Tuesday, September 4, 2018

ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்



எததனை ஆயிரம் ஆசிரியர்கள்-ஆனால் 
நோக்கம், லட்சியம் ஒன்று தானே 
என் மாணவன் முன்னேற வேண்டும் 
தேர்ச்சிப்பெற வேண்டும் 
வெற்றி பெற வேண்டும் 
ஆஹா ! 
எத்தனை உயரிய எண்ணம் 
நீங்கள் அல்லவா 
வணக்கத்துக்குறியவர்கள் 


எத்தை கேலிகள் 
எத்தனை கிண்டல்கள் 
எத்தனை துன்பங்கள், தொல்லைகள் 
உங்களுக்கு செய்தோம் 
இன்று நினைக்கையில் 
என் உள்ளம் வலிக்கிறதே 
உங்கள் காலில் விழுந்து 
மன்னிப்பு கோருகிறோம் 
எங்களை மன்னியுங்கள் - ஐயா 

இன்று வரையிலும் , இனிமேலும் 
நாங்கள் காணும் வெற்றிகளுக்கு 
நாங்கள் அடையும் புகழ்களுக்கு 
உரியவர்கள் நீங்கள் தானே - ஐயா !



ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்


கை எடுத்து வணங்குகிறேன்
நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்

நான் வாழ ! நான் முன்னேற!
எனக்காக உழைத்தவர்கள்
நான் இன்று இன்பம் காண
அன்று துன்பம் பொறுத்தவர்கள்

நான் முத்து சேர்க்க
மூச்சடக்கி முத்து குளித்தவர்கள்
என் இளம் வயதில் கண்ட
நடமாடும் தெய்வங்கள் !
என் ஆசிரியர்கள்



ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்


நாங்கள் பரிட்சை எழுத
நீங்கள் அல்லவா படித்தீர்கள்
நாங்கள் வெற்றிப் பெற
நீங்கள் அல்லவா உழைத்தீர்கள்

கல்லும் உடையாமல்
சிலையும் சிதறாமல்
எங்களை செதுக்கிய
சிற்பி அல்லவா நீங்கள்

மழையின் அருமை தெரியாமல்
மழையை கண்டு ஓடுபவர்போல
உங்களைக் கண்டு ஓடினோம்
மழையின் அருமை
கோடையில் தெரியும்
உங்களின் அருமை, பெருமை
இப்போது உணர்கிறேன் !


என் ஆசிரியர்


கருவில்
என்னை
பத்து மாதம்
சுமந்தாள் என் தாய்
வலிகள் தாங்கி

ஒவ்வொரு வருடமும்
பத்து மாதம்
எங்களை
செதுக்குகிறீர்
விழிகள் மூடாமல்

பலரை அரியாசனம்
ஏற்றினீர்
உங்கள் சிரியசானத்தில்
கூட அமராமல்

திரிகள் பல
மாறிக்கொண்டிருக்க
விளக்காய் நீங்கள்
மட்டும் மாறாமல்

சிறு பொறியாய்
உங்கள் அறிவு
ஆற்றியது பலரை
ஒளி சுடராய் வாழ்வில்

தினம் பூக்கும்
மலர்களை போல
உற்சாகமாய்
பட்டை தீட்டும்
நீங்கள்

மாலையில் கூட
சோர்ந்து விடுவதில்லை
சூரியகாந்தி போல

சில நேரம் நீங்கள்
காட்டும் கண்டிப்பு
என்றுமே மாறியதில்லை
உங்கள் மேல் கோவமாக

உங்கள் அன்புக்கு
நாங்கள் மட்டுமல்ல
இந்த பள்ளிக்கூடம்
கூடமும் அடிமை

ஆற்று நீர் போல
நாங்கள் ஓட
அருவியாய் கொட்டி
கொண்டிருக்கிறீர் நீங்கள்
வறட்சி காலத்தில் கூட

உங்கள் வகுப்பு மட்டும்
இருந்து விடாத
என ஏங்கியது
நாங்கள் மட்டுமல்ல
பல வகுப்பறைகளும் தான்

உங்கள் பிரிவு
என்றுமே
ஆறாத ரணம் தான்
எங்கள் வாழ்வில்

என்றும்
உங்கள் மாணவனாய் ..........................







ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்


எல்லாத்துக்கும் மிக்க நன்றி ஐயா !
உங்கள் சேவைக்கு
நீங்கள் தந்த கல்விக்கு
நன்றி சொல்வது மட்டும் போதாது
நான் என் ஆயுள் முழுவதும்
உங்களுக்கு கடமை பட்டுள்ளேன்

உங்கள் சேவையை என்றும்
மறக்க மாட்டேன் !
நன்றியுடன் உங்களை
நினைத்துப் பார்க்கும்

உங்கள் மாணவன் ஆசிரியர்கள்  தின நல்வாழ்த்துக்கள்!


சிறு புன்னகையுடன்...!


உன்னுடனான  சிறு சிறு
சண்டைகளுக்குப் பிறகு வரும்
சமாதானத்தில் 
உன் பெரிய கொஞ்சலுக்காகவே
அடிக்கடி சண்டையிட 
நினைக்கிறது 
என் இதயம்
சிறு புன்னகையுடன்...



பெண்களின் குணம்...!


தனக்குள் இருக்கும்
சோகத்தை மறைத்து 
சின்ன சின்ன 
சந்தோஷங்களை
ரசித்து வாழ்வதே  
பெண்களின் குணம்...




என் ராட்ஷசா...!


உன் கைகள் கோர்த்து 
உன்னுடன் சேரும் 
எந்தன் வாழ்க்கை 
உனக்காக காத்திருக்கிறது ..
ராட்ஷசா...





Monday, September 3, 2018

வலி...


அபிராமி
நீ
காதலனோடு 
சேர்ந்து வாழ
ஆசைப்பட
உனக்கு 
உரிமையிருக்கிறது

உன்
உடல் தேவையை
ஈடுசெய்ய 
முடியாதவனை
விட்டு விலக
வழியிருக்கிறது

நீ
தேர்ந்தெடுத்த
பாதை
போதையில் 
எடுத்ததால்
ஏற்றுக்கொள்ள
முடியவில்லை.

பிரியாணிக்காரனுக்காக
பிரியமான
குழந்தைகளை
கொன்றது
தாய்மை செய்யாது
ஒருபோதும்.

உன்
கனவுகளை
களைத்து
இளமையில் 
திருமணம் 
செய்து வைத்த
சமூகம் தான்
உன்
நடத்தையை
ஏளனம்
செய்கிறது.

ஏனெனில் 
நீ
செய்த தவறு
மன்னிக்க முயாதது
மட்டுமல்ல 
மறக்கமுடியாதது.

பால் மனம் மாறாத
பச்சை குழந்தைகளை
பாலிலேயே
விஷம் கலந்து
உயிர் கொடுத்த
நீயே
உயிர் எடுத்த
கொடுமையை
உலகம் 
மன்னிக்குமா?